தஞ்சாவூர்: விற்பனை முனையத்தில் புதிய முறையால் ரேஷன்கடைகளில் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது என்று நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது.
தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் ராமலிங்கம், முருகானந்தம், இணை செயலாளர் பஞ்சாபிகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கரிகாலன் வரவேற்றார்.
கூட்டத்தில் மாநில துணைத்தலைவர் ராமலிங்கம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் சிவகுருநாதன், துணைத்தலைவர் ராணி, பொருளாளர் ராமலிங்கம், செயற்குழு உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் இந்தியாவில் தமிழகத்தில் தான் பொது வினியோகத்திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 1-3-2025 முதல் விற்பனை முனையத்தில் புதிய முறை ஏற்படுத்தியதின் விளைவாக பில் வருவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் அங்காடிகளில் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களே இந்த மாதத்தில் இருப்பதால் இதே நிலை நீடித்தால் விற்பனையாளர், வாடிக்கையாளர் இடையே விரோதம் ஏற்படும். எனவே ஆதார் பதிவில் 90 சதவீதம் உறுதிப்படுத்தும் நிலையை 40 சதவீதமாக குறைக்க வேண்டும்.
மின்னணு தராசுடன் புளுடூத் இணைப்பு என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம். அதே நேரத்தில் எங்களுக்கு வழங்கப்படும் பொருட்களை புளூடூத் முறையில் பொருட்களை அங்காடிகளுக்கு கொண்டுவர ஆவண செய்ய வேண்டும். மேலும் இந்த திட்டத்தில் இரண்டு பேர் வேலைபார்க்க வேண்டிய சூழல் உள்ளதால் அங்காடிகளுக்கு உதவியாளர் தேவைப்படுகிறது. எனவே தினக்கூலி அடிப்படையில் உதவியாளர் வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இந்த புளூடூத் முறை தொடர்பாக மாவட்ட அளவில் அதிகாரிகளால் பயிற்சி மற்றும் பிரச்சினை குறித்து விற்பனையாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.