பல்லடம்: குடிபோதையில் ஆம்னி பேருந்தை இயக்கிய டிரைவரை போலீசில் பயணிகளே சேர்ந்து பிடித்து கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து பெங்களூர் நோக்கி 50 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பல்லடம் அருகே வடுகபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அலைபாய்ந்தபடி தாறுமாறாக ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் தங்கள் பேருந்துக்கு என்ன ஆச்சு என்று பார்த்த போது ஓட்டுனர் போதையில் நிலை தடுமாறிய நிலையில் பேருந்தை இயக்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்
பேருந்தை சாலையோரம் நிறுத்த வைத்தனர் , ஓட்டுனரின் சிக்சாக் டிரைவிங்கை கண்டு மிரண்டு போன வாகன ஓட்டிகளும் ஆம்னி பேருந்தை மடக்கினர். பேருந்து ஓட்டுனரை சிறைபிடித்து அவரை சோதனை மேற்கொண்டதில் ஜூஸ் பாட்டிலில் மதுவை கலந்து வைத்திருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் விஜிகுமார், ஓட்டுநர் வெங்கடாஜலபதியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்தனர். அவர் அளவுக்கு மீறிய போதையில் இருப்பது தெரியவந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் காவல்துறை கண்காணிப்பாளர் விஜிகுமார் உத்தரவு பிறப்பித்தார்.
அந்த பேருந்து ஓட்டுனரை வீட்டுக்கு அனுப்பிய நிலையில் ஒருமணி நேரம் தாமதத்துக்கு பின்னர் அந்த பேருந்து மாற்று ஓட்டுனர் மூலம் பெங்களூரு புறப்பட்டுச் சென்றது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் உஷாராக இருந்ததால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாகவே பேருந்து பாதுகாப்பாக நிறுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.