குமுளி: தமிழக-கேரள எல்லையான குமுளி, தேக்கடி, முல்லைப் பெரியாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது.
சில நாட்கள் மழை பெய்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தாறுமாறாக உள்ளது.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி வினாடிக்கு 221 கன அடியாக இருந்த நீர்வரத்து, அடுத்தடுத்த நாட்களில் 282, 404, 405 கன அடியாக அதிகரித்தது.
நேற்று (ஆகஸ்ட் 29) தேக்கடியில் 28.4 மி.மீ., மழை பதிவானது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 41 மி.மீ. மழை பெய்தது.
இதனால் அணைக்கு நீர்வரத்து இன்று (வெள்ளிக்கிழமை) 913 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 130.05 அடியாக உள்ளது.
அணையில் இருந்து வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கேரளாவில் மழைக்கான வானிலை அதிகரித்துள்ளது.
இதனால், மழை அதிகரித்து, நீர்மட்டம் மேலும் உயர்ந்து வருகிறது,” என்றார்.