சாத்தூர்: மின்னல் தாக்கியதில் சாத்தூர் அருகே பட்டாசுகள் சேமிப்பு கிடங்கு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று இடி மின்னலுடன் லேசான சாரல் மழை பெய்து வந்தது.
இந்நிலையில் சிவகாசி மகாராஜன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே முத்தால் நாயக்கன் பட்டியில் செயல்பட்டு வருகிறது. டி.ஆர்.ஒ உரிமம் பெற்ற இந்த ஆலையில் பட்டாசுகள் சேமித்து வைக்கும் அறை மீது திடீரென மின்னல் தாக்கியதில் அந்த அறை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதாக சொல்லப்படுகிறது.
இதில் பட்டாசு சேமிக்கும் அறை முற்றிலும் சேதம் அடைந்து தரைமட்டமானது. அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனமும் லேசான சேதம் அடைந்தது.
மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் இடிந்த கட்டிடத்தின் இடுபாடுகளில் இருந்த பட்டாசுகளில் எரிந்த தீயை விரைந்து அணைத்தனர்.
சாத்தூர் நகர் காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று பட்டாசு ஆலைக்கு விடுமுறை என்பதால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.