தஞ்சாவூர்: தஞ்சாவூர் பகுதியில் உலா வந்த காட்டெருமை பட்டுக்கோட்டை பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த காட்டெருமையை பிடிக்க வனத்துறை அலுவலர்கள் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இரவு, பகல் பாராது ரோந்துப்பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தஞ்சை பகுதியில் காட்டெருமை ஒன்று உலா வந்ததை கண்டு மக்கள் அச்சமடைந்தனர். மாரியம்மன்கோவில், காட்டுத்தோட்டம், தளவாய்பாளையம் என்று பல பகுதிகளில் ஆசுவாசமாக அந்த காட்டெருமை உலா வந்ததுள்ளது. இதை பார்த்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் ஆனந்தகுமார் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் வனசரக அலுவலர் ரஞ்சித், வனவர் இளையராஜா, ரவி,மணிமாறன் ஆகியோர் நான்கு குழுக்களாக பிரிந்து காட்டெருமையை தஞ்சையின் பல பகுதிகளில் தேடினர். மேலும் ட்ரோன் வாயிலாகவும் தேடுதல் வேட்டை நடந்தது. இரவு நேரத்தில் தேட முடியாத நிலையில் மறுநாள் காட்டெருமை நடமாட்டம் குறித்து தேடுதல் வேட்டை நடத்தினர்.
இதில் சில இடங்களில், காட்டெருமையின் கால்தடங்களை பார்த்துள்ளனர் வனத்துறையினர். பின்னர் அப்பகுதி மக்களிடம் காட்டெருமையை கண்டால் துரத்துவதோ, துன்புறுத்துவதோ செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினர்.
தஞ்சை பகுதியில் உலா வந்த காட்டெருமை இந்தியா கவுர் என்ற பெயர் கொண்டவை. இது மிகவும் மென்மையான மிருகம். மனிதன் அதை மிரள செய்தால் மட்டுமே தாக்க முயலும் என்று வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இந்த காட்டெருமை மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கிழக்கு தொடர்ச்சி மலையான திருச்சி பச்சைமலை, அரியலுார் மலை பகுதி வழியாக, கொள்ளிடம் ஆற்றுப்படுகை வழியாக தஞ்சை பகுதிக்கு வந்திருக்கலாம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த காட்டெருமை தஞ்சை நகர் பகுதியிலிருந்து வெளியேறி பட்டுக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளது. பட்டுக்கோட்டை பகுதிகளான பொன்னாப்பூர், சடையார்கோவில், நெய்வாசல் பகுதியில் காட்டெருமை உலா வருவதாக அப்பகுதி மக்கள் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமையில் 2 குழுவினர் காட்டெருமையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றனர்.
பொன்னாப்பூர், தொண்டராம்பட்டு, ஆத்திக்கோட்டை, வண்டாங்கோட்டை, பாப்பாவெளி பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை தேடுதல் வேட்டை நடத்தினர். வனத்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் காட்டெருமை நடமாட்டம் தென்பட்டுள்ளது. பட்டுக்கோட்டையில் உலா வரும் காட்டெருமையை பார்ப்பதற்காக ஒரு கிராமத்தில் மக்கள் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே திரண்டு இருந்துள்ளனர். இவர்களை ரோந்து பணியில் இருந்த வனச்சரக அலுவலர் சந்திரசேகரன் தலைமையிலான வனத்துறையினர் வீட்டிற்குள் செல்லும்படி அறிவுறுத்தியும், காட்டெருமையை கண்டால் அதை துன்புறுத்தக்கூடாது என்று கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இந்த காட்டெருமையை பத்திரமாக பிடிக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மயக்க மருந்து ஊசி செலுத்தி காட்டெருமையை பிடிக்க மருத்துவக்குழுவினர் வருகை தர உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டையில் இந்த காட்டெருமை உலா வந்தாலும் இதுவரை அதனால் யாருக்கும் எவ்வித தீங்கும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் காட்டெருமை திருவாரூர் – தஞ்சாவூர் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் உலா வந்து கொண்டு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.