கூடலூர்: கூடலூரில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை ட்ரோன் பயன்படுத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை இல்லாத அளவில் யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி மக்களை அச்சுறுத்தி வருகின்றன. வனப்பகுதியில் கூட்டமாக இருக்கும் யானைகள் பகல் நேரங்களில் தனித்தனியாக பிரிந்து மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே இதற்கான தனி வனச்சரகரை நியமித்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு, யானைகள் நடமாடும் பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மூலம் யானையை கண்காணிக்க அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு கண்காணிக்கும் பொருட்டு யானைகள் குடியிருப்புகள் நுழைவதை எளிதில் கண்டறிந்து விரட்டுவதற்கான ஏற்பாடுகளை துரிதமாக செயல்படுவதற்காக இந்தப் பணிகளில் வனத்துறையினர் தற்போது இறங்கி உள்ளனர்.
தேவர் சோலை பகுதியில் வனத்துறை குழு யானையை கண்காணிக்கும் போது யானைகள் கூட்டமாக மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த காட்சிகள் ட்ரோன் கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகளை வானத்துடன் மூலம் செயல்படுத்தப்படும் வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்து வருகின்றனர். இதன் மூலம் எந்த பகுதியில் யானைகள் நடமாடுகிறது என்று குழுவில் உள்ளவர்களுக்கு தெரிய வருகிறது. குழுவினர் தங்கள் பகுதி மக்களை இது தொடர்பாக எச்சரிக்கின்றனர்.