சென்னை: போக்குவரத்துத் துறையில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.1137.97 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜூலை 2023 முதல் ஏப்ரல் 2024 வரையிலான காலத்திற்கு முதல் கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு பதிலளிக்கும் விதமாக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2023 முதல் 2025 வரை அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியப் பலன்களை வழங்க ரூ.265.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேற்று ஆகஸ்ட் 18 அன்று மண்டல அலுவலகங்கள் முன் முற்றுகைப் போராட்டத்தைத் தொடங்கினர்.

கடந்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற 3,500 தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தை சென்னையில் உள்ள பல்லவன் இல்லம் முன்பு சிஐடியு மாநிலத் தலைவர் ஏ. சௌந்தரராசன் தொடங்கி வைத்தார்.
இந்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2023-25 ஆம் ஆண்டில் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்காக ரூ.265.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது.