திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பேருந்து நிலையம் அருகே மாபோசி சாலையில் 1949-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை நிறுவப்பட்டது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காந்தி சிலையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நேற்று காலை திருத்தணி டிஎஸ்பி கந்தன் தலைமையில், திருத்தணி வட்டாட்சியர் மலர்விழி உள்ளிட்ட வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், பேரூராட்சி நிர்வாகத் துறையினர், நவீன கருவிகள், ராட்சத கிரேன் மூலம் காந்தி சிலையை பிரமாண்ட கிரேன் மூலம் அகற்றினர்.
இதையடுத்து மணிமண்டபமும் இடிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறியதாவது:- மகாத்மா காந்தி சிலை அகற்றப்பட்டது அனைவருக்கும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அதே இடத்தில் மகாத்மா காந்தி சிலையை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழக அரசே அருகில் உள்ள சந்தையில் சிலையை திறக்க வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.