திருச்செந்தூர்: முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவதாகத் திகழும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மட்டுமே அழகிய கடற்கரையில் அமைந்துள்ளது. எனவே இங்குள்ள கடலில் நீராடுவது புனிதமாக கருதப்படுகிறது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடிய பிறகே சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
புனித நீராடுபவர்கள், தங்கள் பாவங்கள் தீர்ந்துவிடும் என்று கருதி, கடலில் ஆடைகளைக் களைந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடல் தான் கொண்டு செல்லும் பொருட்களை மீண்டும் கரைக்கு கொண்டு செல்வதால், பக்தர்கள் அப்புறப்படுத்திய துணிகள், உடைகள் கரையில் குவிந்து கிடக்கிறது.

கோயில் துப்புரவு பணியாளர்கள் அவற்றை சேகரித்து மிகுந்த சிரமத்துடன் அகற்றி வருகின்றனர். மேலும், கடற்கரை ஓரங்களில் உள்ள பாறைகளில் ஆடைகள் சிக்கி, அங்கு நீராடும் பக்தர்களின் காலில் ஆபத்தை ஏற்படுத்துகிறது. எனவே தாங்கள் நீராடும் புனித கடலிலும், பக்தர்கள் அமர்ந்து மூச்சு விடும் கடற்கரையிலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் ஆடைகளை வீசி எறிவதை கோயில் நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.