சென்னை: தமிழகத்தின் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளதாவது:-
மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 11 முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், 16 மற்றும் 17-ம் தேதிகளில் சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் 15 முதல் 17-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 7 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கலாம். இவ்வாறு வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.