தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் நேற்று மாலையில் தொடங்கிய கனமழை விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்தத் தொடர் மழையால் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை, புத்தூர், பல்லவராயன்பேட்டை, உக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம் சம்பா, தாளடி நெற்பயிர்கள் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் தஞ்சை அருகே பல்லவராயன் பேட்டை பகுதியில் மழையால் வயலில் பெருமளவில் தேங்கிய தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வடிகால் வாய்க்கால்களை தூர்வாராததால் தான் வயலில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. எனவே வடிகால் வாய்க்கால்களை உடனே தூர்வார வேண்டும் , பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு அதிகாரிகள் பார்வையிட்டு கணக்கீடு செய்ய வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.