பாலக்கோடு: தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை நிரம்பியது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் தற்போது 48.3 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 140 கன அடியாக உள்ளது.
அதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் 148 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, பாலக்கோடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4,500 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது.
அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் எந்த நேரத்திலும் அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்படும் பட்சத்தில் ஆற்றோரும் வீடுகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பு இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.