ஊட்டி: நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலாப்பயணிகள் வரத்து இல்லாததால் சுற்றுலா மையங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக, ஊட்டி, குந்தா, கூடலுார், மற்றும் பந்தலுார் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மழைக்கு இதுவரை, 10 வீடுகளில் பக்கவாட்டு சுவர் இடிந்து சேதமாகியுள்ளது.
அந்தந்த பகுதி வருவாய்த்துறை சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி பொருட்கள் வழங்கியுள்ளனர். மாவட்டம் முழுவதும் மாலை வரை, 30 பேர் நிவாரண முகங்களில் தங்கியுள்ளனர்.
ஊட்டி, இத்தலார், அவலாஞ்சி சுற்றுப்புற பகுதிகளில், 15 இடங்களில் சிறிய அளவில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையினர் சம்பவ பகுதிக்கு சென்று மணல் மூட்டைகளை அடுக்கி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
வருவாய் துறையினருடன், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் குந்தா, ஊட்டி, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கனமழைக்கு நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகள் படிப்படியாக நிரம்பி வருவதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.