தஞ்சாவூர்: நாட்டு சர்க்கரை மற்றும் அச்சு வெல்லத்திற்கு தமிழக அரசே கூடுதல் விலை நிர்ணயம் செய்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்யவதற்க்கு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பகுதிகளை சுற்றியுள்ள வீரமாங்குடி, இலுப்பக்கோரை , மாகாளிபுரம், கணபதி அக்ரஹாரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்புகள் பயிரிடப்பட்டு ஆலைகளில் அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அச்சு வெல்லத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து கரும்பு விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: தற்போது கரும்பு பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டு பயிர்கள் குன்றி கரும்பு விளைச்சல் பாதிப்பு அடைந்துள்ளது. ஏக்கருக்கு ஒன்றுக்கு 80-டன் கரும்பு மகசூல் செய்த இடத்தில் தற்போது பாதியாக குறைந்துவிட்டது.
பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் நாங்கள் கரும்பு சாகுபடி செய்து வருகிறோம். இப்போது ஏற்பட்டுள்ள இழப்பு பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. அச்சு வெல்லம், நாட்டு சர்க்கரை விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது பொருளாதார ரீதியாக எங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது தயாரிக்கப்படும் நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லத்திற்கு 30 கிலோ கொண்ட சிப்பம் 1800 முதல் 2000 வரை தமிழக அரசு விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் வெல்லத்தை தமிழகம் முழுவதும் அமைந்துள்ள நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய முன்வர வேண்டும்.
தஞ்சை குருங்குளம் சர்க்கரை ஆலை மூலம் விவசாயிகளின் கரும்புகளை பல ஆண்டுகளாக கொள்முதல் செய்யாமல் உள்ளனர். உடனடியாக விவசாயிகளின் கரும்புகளை குருங்குளம் சர்க்கரை ஆலையினர் விரைந்து கொள்முதல் செய்ய வேண்டும் என பாபநாசம் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வெல்லம் தயாரிப்பாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.