சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜூன் 4-க்குள் விண்ணப்பிக்குமாறு தேர்வுத் துறை இறுதி வாய்ப்பு வழங்கியுள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இணை இயக்குநர் கே.பி. மகேஸ்வரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 22 முதல் பதிவிறக்கம் செய்து வழங்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்த சான்றிதழில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி உள்ளிட்ட விவரங்களில் ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்தம் செய்ய இறுதியாக ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தலைமை ஆசிரியர்கள் மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு, ஜூன் 4-க்குள் தேர்வுத் துறை மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதன் நகலை மாணவர்களிடமும் வழங்க வேண்டும் என்றும், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பிழையற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிட இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.