சென்னை: கர்டர்கள் சரிந்து விபத்து ஏற்பட்டதை அடுத்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கட்டுமானப்பணிகள் குறித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மணப்பாக்கத்தில் மெட்ரோ ரயில் இணைப்பு பாலப் பணிக்காக அமைக்கப்பட்டிருந்த கர்டர்கள் சரிந்து விழுந்த சம்பவத்தை அடுத்து, பாதுகாப்பு தன்மையை உறுதி செய்து அறிக்கை சமர்பிக்க, மெட்ரோ ரயில் உயர்மட்ட வழித்தடத்துக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் 3 நிறுவனங்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு வழித்தடமாக மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான 3-வது வழித்தடத்தில் பல இடங்களில் உயர்மட்டபாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தடத்தில் ஒரு பகுதியாக, போரூர் – சென்னை வர்த்தக மையம் வழித்தடத்தில் உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
இவற்றில், நந்தம்பாக்கம் அருகே இணைப்பு பாலம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இதற்காக, மணப் பாக்கம் எல் அண்ட் டி நிறுவன நுழைவுவாயில் அருகே இரு தூண்களுக்கு இடையே இரண்டு ராட்சத கர்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த கர்டர்கள் கடந்த 12-ம் தேதி இரவு சரிந்து விழுந்தது. இதில் சிக்கி நாகர்கோவிலைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் தொடர்பாக, மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தலைமையில் குழு அமைத்து ஆய்வு நடைபெறுகிறது. இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்பு தன்மையை உறுதி செய்து அறிக்கை சமர்ப்பிக்க, மெட்ரோ ரயில் உயர்மட்ட வழித்தடத்துக்கான கட்டுமானப்பணிகளை மேற்கொள்ளும் 3 நிறுவனங்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உத்தரவு பிறப்பித்துள்ளது.