சென்னை: வாடகை கட்டிடங்களுக்கான ஜிஎஸ்டி வரியை கண்டித்து தமிழ்நாட்டில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டது.
வணிக பயன்பாட்டிற்கான வாடகை கட்டிடங்களுக்கு மத்திய அரசு விதித்த 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரி மற்றும் தமிழக அரசு உயர்த்திய மின்கட்டணம், சொத்து, குப்பை வரிகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
ஈரோட்டில் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் ஈரோட்டில் பிரபலமான ஜவுளி, மஞ்சள் சந்தைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இதேபோன்று சத்தியமங்கலத்தில் பேருந்து நிலையம், அத்தாணி சாலை, மணிக்கூண்டு, கோவை சாலை பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சேலத்தில் வெங்காயம், பூண்டு, மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட மொத்த விற்பனை கடைகள் உள்ள லீ பஜார், சத்திரம் பால் மார்க்கெட் பகுதிகளில் கடைகளை அடைத்து வணிகர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
மதுரையில் கீழமாசி வீதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட உணவுப் பொருள் மற்றும் அத்தியாவசிய வீட்டு உபயோகப் பொருள் விற்பனை கடைகள் அடைக்கப்பட்டன.
இதேபோன்று சோழவந்தான், வாடிப்பட்டி பகுதிகளிலும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 95 சதவீத கடைகளை அடைத்தும், தேனி மாவட்டம் போடியில் 90 சதவீத கடைகளை அடைத்தும் வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.