சென்னை: டாஸ்மாக் மற்றும் கனிமவள வழக்குகளை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மண்டல அமலாக்கத்துறை இணை இயக்குனராக இருந்த பியூஸ் குமார் யாதவ் மற்றும் துணை இயக்குநர் கார்த்திக் தசாரி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கனிமவள வழக்கு, டாஸ்மாக் வழக்கு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர்கள் துரைமுருகன், அனிதா ராதாகிருஷ்ணன், கதிர் ஆனந்த் எம்.பி. தொடர்புடைய வழக்குகளை மேற்கண்ட இரண்டு அதிகாரிகளும் விசாரித்து வந்தனர்.
இது தொடர்பாக பல்வேறு இடங்களிலும் இருவரும் சோதனை நடத்தி ஆவணங்களையும் திரட்டி அதிரடி விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஐ.ஆர்.எஸ். அதிகாரிகளான பியூஸ் குமார் யாதவ் மற்றும் கார்த்திக் தசாரி ஆகியோர் அயலக பணியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இணை இயக்குநர் மற்றும் துணை இயக்குநராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது இருவரும் வருமான வரித்துறைக்கே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தது இணை இயக்குநர் பியூஸ் குமார் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.