சென்னை: தலைமுடியை கருமையாக மாற்றுவதற்கு வெங்காய தோலை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம். இதனை நம் வீட்டிலேயே சுலபமாக செய்திட முடியும்.
இன்றைய சூழலில் பலரும் இளநரை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், மரபியல் கோளாறு, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் இளநரை ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு இளநரை ஏற்பட்டால் அதை மறைக்க ஹேர் டை பயன்படுத்தும் பழக்கம் நிறைய பேருக்கும் இருக்கும். ஆனால், அதிகப்படியான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட ஹேர் டை பயன்படுத்தும் போது அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இதற்கு வீட்டில் இருக்கும் வெங்காய தோல் மூலம் எளிமையான தீர்வை பெற முடியும்.
சுமார் ஒரு லிட்டர் தண்ணீரில் வெங்காய தோல்களை நன்றாக ஊற வைக்க வேண்டும். இதையடுத்து, இந்த வெங்காய தோல் இருக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் கருஞ்சீரகம் மற்றும் தேயிலை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
இந்த தண்ணீரின் நிறம் கருமையாக மாறியதும் அடுப்பை ஆஃப் செய்து விடலாம். அதன் பின்னர், இந்த தண்ணீரை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும். இந்த தண்ணீரை மறுநாள் காலை நாம் குளிக்கும் போது பயன்படுத்த வேண்டும்.
அதாவது முற்றிலும் குளித்து முடித்த பின்னர், இந்த தண்ணீரை இறுதியாக தலையில் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்த பின்னர் மீண்டும் வேறு தண்ணீர் ஊற்றி அலசக் கூடாது. இப்படி செய்யும் போது தலை முடி உறுதியாக இருக்கும். இது மட்டுமின்றி இளநரை மறையத் தொடங்கும்.
எனவே, செயற்கையான ஹேர் டை பயன்படுத்த விருப்பம் இல்லாதவர்கள், இந்த முறையை பின்பற்றி தலை முடியை கருமையாக்கலாம்.