தஞ்சாவூர்: தஞ்சையில் செயல்படும் அனைத்து மக்கள் இயக்கங்கள் சார்பில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவரும் பிசானத்தூர் மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகில் உலகத் தமிழர் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மைய மாவட்ட செயலாளர் கோ.ஜெய்சங்கர், சிபிஎம்எல் மக்கள் விடுதலை மாநில துணைத்தலைவர் இரா.அருணாச்சலம், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மக்கள் விடுதலை பண்பாட்டு பேரியக்கம் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பாட்டாளி, தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயலாளர் அ.யோகராஜ், விசிக ஆட்டோ சங்க செயலாளர் க.தமிழ்முதல்வன், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்டச் செயலாளர் த.தாமஸ்,மாவட்ட பொருளாளர் ஆர்.லட்சுமணன், மார்க்சிய பெரியாரிய அம்பேத்கர் கூட்டமைப்பின் கே.மூர்த்தி,ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளர் நா.சாமிநாதன், நிர்வாகி ஏ.ஜெஸ்டின் ஆகியோர் தமிழ்நாடு அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா பிசானத்தூர் கிராமத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை. உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கு அரசு அறிவித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலை இந்த இடத்தில் அமைத்தால் வேளாண்மை பாதிக்கப்படும், நிலத்தடிநீர் மாசுபடும், புற்றுநோய், நுரையீரல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்படுவார்கள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இந்த திட்டத்தை பிசானத்தூரில் அமைக்க கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அனைவருக்கும் கோரிக்கை அளித்தும் பயனில்லாத நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மக்கள் நலன் காக்கும் திராவிட மாடல் தமிழ்நாடு அரசு சுற்றுச் சூழல் பாதிப்பு, கிராம மக்களின் வாழ்வாதாரம், அன்றாட பணிகளை கவனத்தில் கொண்டு ஆலை அமைக்கும் திட்டத்தை திரும்ப பெற்று அமைதியை நிலை நாட்டிட கேட்டு கொள்கிறோம் என தெரிவித்துள்னர். பின்னர் கந்தர்வகோட்டை தாலுகா பிசானத்தூர் கிராமம் சென்று மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வாழ்த்தி பேசினர்.