மதுரை: மதுரை அலங்காநல்லூரில் பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்தது. இதில் தவெக கொடியை காட்டியதால் வெற்றிப் பெற்றும் மாட்டின் உரிமையாளருக்கு பரிசு கொடுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்தப் போட்டியின் போது, மாட்டின் உரிமையாளர் ஒருவர் தனது காளையை வாடிவாசலில் அவிழ்க்கும்போது, திடீரென ‘தமிழக வெற்றிக் கழக’ (TVK) கொடியைக் காண்பித்தார். களத்தில் இறங்கிய அந்தக் காளை, மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. இதனால் அந்த மாட்டின் உரிமையாளர் பெரும் மகிழ்ச்சியில் இருந்தார்.
இருப்பினும், மைதானத்திற்குள் அரசியல் கட்சி கொடியைக் காண்பித்தது விதிமுறைகளுக்கு எதிரானது என போட்டி ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்தது. “ஜல்லிக்கட்டு களத்தில் அரசியல் அடையாளங்களைப் பயன்படுத்தக் கூடாது” எனக் கூறி, வெற்றி பெற்ற அந்தக் காளைக்கான பரிசை வழங்க கமிட்டி மறுத்துவிட்டது.
“இந்த மாட்டிற்குப் பரிசு கிடையாது” என்று அறிவிக்கப்பட்ட இந்தச் சம்பவம், தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.