தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லத்தில் ஜல்லிக்கட்டு மாடு முட்டி பலியான அரசு பள்ளி 10ம் வகுப்பு மாணவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணத் தொகையை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்.
தஞ்சை அருகே வல்லம் சவேரியார் கோயில் தெருவை சேர்ந்தவர் இசையாஸ். இவரது மனைவி மேரி கிரேஸி. இவர்களுக்கு மூன்று மகன்கள். இதில் மூத்த மகன் திரண் பெணடிக்ட். வல்லம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் திரண் பெணடிக்ட் வீட்டுக்கு திரும்பும் போது அற்புதாபுரம் சாலையில் உள்ள ஒரு பண்ணை அருகே கட்டி வைக்கப்பட்டு இருந்த ஜல்லிக்கட்டு காளையை திரண் பெணடிக்ட் பிடிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
அப்போது திடீரென ஜல்லிக்கட்டு காளை திரண் பெணடிக்ட் நெஞ்சில் குத்தியுள்ளது. இதில் திரண் பெணடிக்ட் பலியானார்.
இதுகுறித்து மாணவரின் பெற்றோர் மாட்டின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்தனர். மேலும் தனது மகன் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் மனு அளித்திருந்தனர்.
இந்நிலைவயில் மாடு முட்டி பலியான மாணவரின் குடும்பத்திற்கு நேற்று முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து அரசு சார்பில் ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நிவாரண தொகைக்கான காசோலையை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், எஸ்.பி., ராஜாராம், எம்.எல்.ஏக்கள் திருவையாறு துரை.சந்திரசேகரன், தஞ்சாவூர், டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆகியோர் மாணவரின் பெற்றோரிடம் வழங்கினர்.
இதில் தஞ்சை முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் அருளானந்தசாமி, வல்லம் பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், வல்லம் நகர செயலாளர் டி.கே.எஸ்.ஜி கல்யாணசுந்தரம், 12 வது வார்டு கவுன்சிலர் சிங்.இரா.அன்பழகன், துணை செயலாளர் ராஜா, வல்லம் அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர். நிவாரண தொகை வழங்கிய அரசுக்கு மாணவரின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.