சென்னை : மக்கள் வரவேற்பு… மெட்ரோ ரயில்கள், மாநகர பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் ஒருங்கிணைந்த பயண சேவையை வழங்க அறிமுகப்படுத்தி உள்ள ‘சிங்காரச் சென்னை பயண அட்டை’, சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருப்பதாக மாநகராட்சி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் மாநகர பேருந்துகளில் ஒரே ஸ்மார்ட் அட்டையை ஸ்வைப் செய்து எளிதாக பயணிக்கும் திட்டம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பயன்படுத்தும் வகையில், சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை 2023ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
ரிசார்ஜ் செய்து கொள்ளும் வகையில் இருக்கும் ஸ்மார்ட் அட்டையை பயன்படுத்தி மாநகர பேருந்துகளிலும் பயணம் செய்யும் நடைமுறையும் அண்மையில் அமலுக்கு வந்தது. இந்த ஸ்மார்ட் அட்டைகள் கிளாம்பாக்கம், வடபழனி, பெரம்பூர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்களில் கட்டணமின்றி வழங்கப்படும்.
இந்த அட்டைகளை ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைன் போர்ட்டல்கள், கைபேசி செயலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மாநகர் போக்குவரத்துக் கழக பயணச்சீட்டு விற்பனை மையங்கள் போன்ற பல்வேறு வழிகளில் இந்த அட்டையை எளிதாக ரீசார்ஜ் செய்யலாம்.விரைவில் மின்சார ரயில்கள், விரைவு ரயில்களிலும் ஸ்மார்ட் அட்டை திட்டத்தை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இதுவரை 12,500 சிங்காரச் சென்னை பயண அட்டைகள் விற்பனையாகி உள்ளதாகவும், 60%-க்கும் மேற்பட்ட பயணிகள் MTC பேருந்து சேவைகளுக்கு இதனை பயன்படுத்துவதாகவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
தற்போது 3,900 பேருந்துகளில் மின்னணு டிக்கெட் இயந்திரம் பயன்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.