சென்னை: நாடு முழுவதும் உள்ள விமான நிலைய உணவகங்களில் உணவு விலை பல மடங்கு அதிகமாக இருப்பதாக புகார் எழுந்ததை அடுத்து, விமான நிலையங்களில் மலிவு விலை உணவகங்களை திறக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் நாட்டிலேயே முதன்முறையாக கொல்கத்தா விமான நிலையத்தில் ‘உதன் யாத்ரி கஃபே’ திறக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டின் இரண்டாவது ‘உடான் யாத்ரி கஃபே’ பட்ஜெட் உணவகத்தை சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் திறந்து வைத்தார்.
பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நாட்டிலேயே 4-வது பெரிய விமான நிலையம் சென்னை. இங்கு மேலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதன் காரணமாக இங்கு மற்றொரு முனையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே முடிவடைந்து 2023-ல் முதல் கட்ட விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.அதன் இரண்டாம் கட்டத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. சென்னையின் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது குறித்து பல ஆண்டுகளாக விவாதம் நடந்து வருகிறது.
மத்திய அரசைப் பொறுத்த வரையில், மாநிலத்தில் பல விமான நிலையங்களை அமைக்க விரும்புகிறது. இருப்பினும் விமான நிலையங்கள் அமைப்பதற்கு ஏற்ற நிலங்களை தேர்வு செய்வது மாநில அரசின் கடமை. மாநில அரசு தேர்வு செய்யும் இடத்தை மத்திய அரசு முழுமையாக ஆய்வு செய்து, சாத்தியக்கூறு ஆய்வு நடத்தி, விமான நிலையம் அமைக்க அனுமதி வழங்குகிறது. அதேபோல், சென்னையின் 2-வது விமான நிலையத்தை அமைக்க மாநில அரசு பரந்தூரை தேர்வு செய்துள்ளது. தற்போது, அதற்கான நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், மாநில அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலம் தொடர்பான பிரச்னைகளை மாநில அரசு தீர்க்க வேண்டும்.
சென்னை விமான நிலையத்தை தனியார் மயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை. விமான டிக்கெட் விலை உயர்வை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் விமான கட்டணம் தானாகவே குறையும். எனவே, உடான் திட்டத்தில் பல புதிய விமான நிலையங்களை உருவாக்குவது, அதிக விமான சேவைகளை தொடங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவோம். விமான சேவைகளை இயக்குவது தொடர்பாக வெளிநாடுகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இருந்து சென்னை விமான நிலையம் தொடர்ந்து விலக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல் சரியானது அல்ல. வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுடன் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களும் இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் அதிக தேவை உள்ளது. அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் விரிவுபடுத்த உள்ளோம். தமிழகத்தில் உடான் விமான சேவை திட்டத்தின் முதல் கட்டமாக சேலம், வேலூர் மற்றும் நெய்வேலிக்கு விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் ஏற்கனவே விமான சேவை உள்ளது. சென்னையில் இருந்து வேலூருக்கு விமான சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் சென்னை – வேலூர் இடையே விமான சேவை தொடங்கப்பட்டு, வேலூர் விமான நிலையமும் செயல்பாட்டுக்கு வரும். நெய்வேலியில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.