சென்னை: வங்கதேசத்தில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 131 பேர் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். வங்கதேசத்தில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக, உயர் கல்விக்காக அந்நாட்டுக்கு சென்றிருந்த, தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் அங்கு சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தமிழர் நலன் மற்றும் அயல்நாடுகளில் வாழும் தமிழர்களின் மறுவாழ்வு ஆணையரகம், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது. இதற்காக சிறப்பு வாட்ஸ்-அப் குழு ஒன்று உருவாக்கப்பட்டு, அந்த குழுமூலம், வங்கதேசத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவ, மாணவிகளைஒருங்கிணைத்து, முதல்கட்டமாக 49 மாணவ, மாணவிகள் மீட்கப்பட்டனர்.
அவர்கள் அங்கிருந்து இந்தியாவின் அசாம் மாநிலம் குவஹாட்டிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து, 2 விமானங்கள் மூலம் 49 மாணவ, மாணவிகளும் நேற்று முன்தினம் சென்னை அழைத்துவரப்பட்டனர். அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அதிகாரிகள் அவர்களை வரவேற்று, அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலமாக சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 82 மாணவர்கள் விமானம் மூலம் நேற்று இரவு சென்னை அழைத்து வரப்பட்டனர். மாணவர்கள் அழைத்து வருவதற்கான விமான பயணச்சீட்டு கட்டணம் முழுவதும் தமிழக அரசே ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.