சென்னை: கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை, தமிழக விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், இல்லத்தரசிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் தக்காளி விலை ரூ.100-ஐ எட்டியுள்ளது. கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால், பெங்களூருவில் இருந்து தமிழகத்துக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் ஒரு வாரத்தில் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
கோயம்பேடு சந்தை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து தினமும் 70 வாகனங்களில் தக்காளி வரும் நிலையில், 40 வாகனங்களில் மட்டுமே தக்காளி வரத்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வடமாநிலங்களிலும் தக்காளி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதால், கர்நாடகா, ஆந்திராவில் இருந்து வடமாநிலங்களுக்கு தக்காளி அனுப்பப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ உள்ளூர் தக்காளி ரூ.75க்கும், பெங்களூரு தக்காளி ரூ.80க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்கப்படுகிறது.
திருச்சி காந்தி மார்க்கெட்: திருச்சிக்கு ஓசூர், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70க்கு விற்கப்படுகிறது. சில்லரை விலையில் ரூ.40க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் 25 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1,550க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழையால் தக்காளி வரத்து குறைந்ததால் தக்காளி விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். மேலும், வரத்து சீராகும் வரை தக்காளி விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 30,000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தொடர் மழையால் 90% தக்காளி செடிகள் அழுகி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். ஏக்கருக்கு ரூ.1 லட்சம் செலவு செய்தும் விளைச்சல் போதவில்லை. மேலும், தொடர் மழையால் ஏக்கருக்கு 500 டன் தக்காளி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். கிருஷ்ணகிரியில் 25 கிலோ தக்காளி பெட்டி ரூ.300-ரூ.500 வரை விற்பனையாகிறது; தற்போது ரூ.1,700க்கு விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.