சென்னை: கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் மூலம் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டிஎம்சி. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவில் தற்போது 5.435 டிஎம்சி (46.22%) உள்ளது.
புழல் ஏரிக்கு நேற்று வினாடிக்கு 46 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 672 கன அடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 2349 மில்லியன் கன அடியாக உள்ளது.
கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 650 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவான, 3645 மில்லியன் கன அடியில், 2198 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், இன்று 36 கனஅடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 117 மில்லியன் கன அடியாக உள்ளது.
பூண்டி ஏரியில் 290 கன அடியாகவும், வீராணம் ஏரியில் 321 கன அடியாகவும் நீர்வரத்து உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணங்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர் இருப்பு 301 மில்லியன் கன அடியாக உள்ளது.