கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து, இந்த நோய்க்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயக், அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் நோய் பாதிப்பு குறித்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மூளையைத் தின்னும் அமீபா வகை ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ தொடர்பாக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள் மற்றும் ஏரிகளில் சுற்றுப்புற சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற மூளையை உண்ணும் நோயால் கேரளாவில் சமீபகாலமாக உயிரிழப்பதைக் கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
இந்த நோயின் அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு ஆகியவை அடங்கும்.” முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதள பக்கத்தில், “கேரள மாநிலத்தில் அமீபா பாக்டீரியா பரவி 3 பேர் உயிரிழந்துள்ளதாக வெளியான செய்தி கவலை அளிக்கிறது.
அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வருவதால், தமிழகத்தில் இது பரவாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அசுத்தமான நீரில் பரவும் இந்த நுண்ணுயிரி, குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது, எனவே, மக்களின் உயிரைக் காக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், இந்த தி.மு.க., அரசின் முதல்வர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, வலியுறுத்தினார்.