சென்னை: விளிம்பு நிலை குழந்தைகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும், கல்வி உயர்வுக்கும் கரம் கொடுக்கலாமே.
பிறரின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, நீங்கள் ஒரு வலுவான அஸ்திவாரமாக மாறலாம். அவர்களின் அகமும், மனமும் மகிழ்வதை நாமும் உணரலாம். உங்களால் முடிந்தவரை ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவலாமே. உதவுங்கள். உங்கள் மனிதாபிமானம் என்ற ஆலமரத்தின் நிழலில் அவர்கள் இளையாறச் செய்யுங்கள்.
குழந்தைகளின் எதிர்கால வாழ்விற்கும், அவர்களின் கல்விக்கும், பாதுகாப்பிற்கும் கடுமையாக உழைக்கும் சிறப்பாக செயல்படும் ஜீவ ஜோதி நிறுவனம் உள்ளது. அதன் வாயிலாக உங்கள் உதவி அவர்களை சென்றடையட்டும்.
கடந்த 1994ல் நான்கு சமூக ஆர்வலர்களால் நிறுவப்பட்ட ஜீவ ஜோதி, கடினமான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையில் நெறிமுறை மாற்றங்களைக் கொண்டு வந்தது. குறிப்பாக தெருக்களில் உள்ள குழந்தைகள் மற்றும் வேலை செய்யும் குழந்தைகளின் வாழ்க்கையில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு கல்வியும், சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் அளிக்க பாடுபட்டது. இன்று மனிதாபிமான உணர்வுகளால் வானுயர்ந்து நிற்கும் ஆலமரம் போல் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு வலுவான அஸ்திவாரத்தை தந்து கொண்டு இருக்கிறது ஜீவஜோதி.
ஆரம்பத்தில், கொசப்பூர் என்ற கிராமத்தில் தொடங்கப்பட்டது ஜீவஜோதி. தன் செயல்பாட்டால் பல் குழந்தைகளின் வாழ்வின் அஸ்திவாரத்தை அழுத்தமாக ஏற்படுத்தி தந்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வின் ஆதாரத்தை வலுவாக்க கடினமான உழைப்பை கொடுத்தது ஜீவ ஜோதி. குழந்தைத் தொழிலாளர்களின் நிலை, அவர்களால் அதனால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதை மக்கள் மத்தியில் உணர்த்தினர்.
குழந்தை தொழிலாளர்களாக வேதனைகளை சுமந்த குழந்தைகளை புன்முறுவல் ஏற்படுத்தும் வகையில் மாற்றியுள்ளது ஜீவஜோதி. இன்றைய காலக்கட்டத்தில் தேவையான செலவுகளை விட தேவையற்ற செலவுகளே அதிகம் செய்கிறோம். பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ஒரு நாளில் செய்யும் செலவை இதுபோன்ற குழந்தைகளின் நலனுக்காக பாடுபடும் ஜீவஜோதிக்கு அனுப்பலாம். உங்களின் மனிதாபிமானம் என்ற விளக்கு குழந்தைகளின் வாழ்விற்கு வழிகாட்டும்.
ஜீவஜோதியை தொடங்கிய வி.சூசைராஜ், ஆண்ட்ரூ சேசுராஜ், விஜய்குமார், ரோஸி சுஜாதா ஆகிய 4 பேரும் குழந்தைகளை பாதுகாக்கும் கோட்டையின் பாதுகாவலர்களாக உள்ளனர். இன்றைய நிலையில் 50 குழந்தைகள் வரை இவர்களின் பாதுகாப்பில் துணைக் கல்வி வகுப்புகள், முறைசாரா கல்வி வகுப்புகள், மருத்துவ உதவி போன்றவற்றை பெற்று வருகின்றனர்.
ஜீவஜோதியின் தலையீட்டின் மூலம் வடசென்னையில் 30,000க்கும் மேற்பட்ட தெருவோர மற்றும் வேலை செய்யும் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களின் நிலை உயர்த்தப்பட்டுள்ளது என்றால் மிகையில்லை. பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றில் ஓட்டல்களில் கொண்டாட்டம் வைத்து நாம் வீணாக்கும் உணவுகள் வேறெங்கோ உணவின்றி வாடும் குழந்தைகளின் நலன் காக்க தரலாமே. ஜீவஜோதியின் அயராத உழைப்பால் வீட்டை விட்டு ஓடிப்போன பல குழந்தைகள் மீண்டும் அவர்களின் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டனர். குடும்பத்தினருடன் செல்ல விரும்பாத குழந்தைகள் சிறுவர் இல்லங்களில் அனுமதிக்கப்பட்டனர்.
புற்றுநோய் சிகிச்சைக்கான உதவி, மருந்து வாங்க உதவி, கல்வி கற்க ஆதரவு என்று தங்களின் சுயநலமில்லா உழைப்பால் விருதுகளை குவித்துள்ளனர். தேடிவரும் விருதுகள் ஏராளம் என்றால் மிகையில்லை. இவர்களின் செயல்பாடுகளை கண்டு காவல்துறையினரும் குழந்தைகளை மீட்டெடுக்க இவர்களை நாடுகின்றனர். உறவினர்களுக்கு அளிக்கப்படும் விருந்து. வீணாக கொட்டப்படும் உணவு என்று ரூ. 2 லட்சம், ரூ.5 லட்சம் என்று சில மணி நேரங்களுக்காக செலவிடுவதும், டூர் என்ற பெயரில் தேவையற்ற செலவுகளை செய்வதையும் நாம் மறந்து இதுபோன்ற குழந்தைகளின் நலனுக்காக, தன்னலமின்றி செயல்பாடும் ஜீவ ஜோதிக்கு கொடுத்து உதவலாமே. விளிம்பு நிலை குழந்தைகளின் உயர்வுக்கு அளித்தால் இன்னும் மகிழ்ச்சி கிடைக்குமே. மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள: 9944793842