சென்னை: நாடு முழுவதும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் தாக்கல் செய்த 2025-ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன்கள் தற்போது வருமான வரித்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மூன்று மடங்கு அதிகமான ரிட்டர்ன்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. எனவே, ஒவ்வொரு தனிநபரும் தங்களது வருமான விவரங்களை முழுமையாகக் கொண்டே தாக்கல் செய்திருக்க வேண்டும். இல்லையெனில், ரீஃபண்ட் பெறுவது கடினமாகும்.

முந்தைய ஆண்டுகளில் ரீஃபண்ட் வழங்கிய பிறகு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுவதுண்டு. ஆனால் இந்த ஆண்டு முதல் சந்தேகங்கள் தீர்க்கப்பட்ட பின்பே ரீஃபண்ட் அனுப்பப்படும் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தற்போது, 1.65 லட்சம் வரை ITR-கள் ஆய்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது வழக்கமாக இருந்து வந்த 50,000 – 60,000 வழக்குகளை விட மூன்றுமடங்கு அதிகம். நோட்டீஸ் அனுப்புவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 ஆகும்.
அசாதாரணமான பண டெபாசிட்கள், விளக்கம் இல்லாத வங்கி வரவுகள், தவறான ஆதாரங்களை கொண்டு முதலீடுகள், ஜிஎஸ்டி தரவுகளுடன் ஒத்துப்போகாத வருமானம் ஆகியவை இந்த ஆய்வுக்கு காரணமாக உள்ளன. CASS எனப்படும் கணினி ஆதார அமைப்பு மூலமாக இந்த கண்காணிப்பு செயல்படுகிறது. இது ஆபத்து அடிப்படையில் ரிட்டர்ன்களை தேர்ந்தெடுத்து ஆய்வு செய்யும் ஒரு முறையாகும். 2025 ஆண்டு மதிப்பீட்டில், மேம்பட்ட டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் புதிய நிதி தரவுத்தள இணைப்புகள் காரணமாக இந்த கண்காணிப்பு மாறுபட்டுள்ளது.
முக்கியமாக கிரிப்டோ வருமானங்களை மறைத்து வருமானம் காட்டாதவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிப்டோ பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் சூழ்நிலையில், அவற்றை மறைத்து வரி ஏய்ப்பு செய்தால் அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவையாக இருக்கும். இத்தகைய புதிய உத்திகள் வருமான வரித் தாக்கல்களை துல்லியமாக செய்யும் நற்பழக்கத்தைக் கட்டமைக்க வழிவகுக்கின்றன.