வங்கதேசம்: நீதித்துறை அதிகாரிகள் இந்தியாவில் மேற்கொள்ள இருந்த பயிற்சியை ரத்து செய்துள்ளது வங்கதேசம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இரு நாட்டு ஒப்பந்தப்படி வங்கதேச நீதித்துறை அதிகாரிகள் இந்தியாவில் மேற்கொள்ள இருந்த பயிற்சியை வங்கதேச அரசு ரத்து செய்துள்ளது. வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தபோது, அந்நாட்டின் நீதிபதிகள், நீதித்துறை அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சி மேற்கொள்ள ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. பயிற்சித் திட்டங்களுக்கான அனைத்துச் செலவையும் இந்திய அரசே ஏற்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
அதன்படி, இந்த ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமி மற்றும் மாநில நீதித்துறை அகாடமியில் பயிற்சி நடைபெற இருந்தது. உதவி நீதிபதிகள், மூத்த உதவி நீதிபதிகள், கூட்டு மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள், கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகள் மற்றும் பிற அதிகாரிகள் என 50 பேர் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இதற்கு அந்நாட்டு அரசும் கடந்த டிசம்பர் 30-ம் தேதி அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், இந்த பயிற்சி திட்டத்தை வங்கதேச இடைக்கால அரசு ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டது. இதனை சட்ட அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். நீதிபதிகள் பயிற்சி திட்டம், இரு தரப்பு உறவை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக கருதப்பட்ட நிலையில், அதனை வங்கதேச அரசு ரத்து செய்திருப்பது கவனிக்கத்தக்கது.