உதகை: நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் உதகை, கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் உதகை தாவரவியல் பூங்காவில் இருந்து ராஜ்பவன் கவர்னர் மாளிகை செல்லும் சாலையிலும், அத்திக்கல் சாலையிலும் ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன.
தீயணைப்பு துறையினர் அங்கு வந்து மரங்களை அகற்றினர். இதேபோல் கூடலூர் தேவர்சோலை 4-வது மைல் அருகே மூங்கில் மரம் சாலையில் விழுந்ததால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதே சாலையில் 3-வது மைல் மீனாட்சி பகுதி அருகே கூடலூரில் இருந்து பாடந்துறை நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மரம் விழுந்தது. இதில், வாகனத்தை ஓட்டி வந்த இப்ராகிம் (32) படுகாயம் அடைந்தார்.
மேலும், 3-வது மைல் மார்க்கத்தில் காட்டு யானை சாலையில் நின்றதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. யானை வனப்பகுதிக்குள் நுழைந்த பிறகுதான் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
தேவாலாவில் அதிகபட்சமாக 186 மி.மீ. மழை பெய்தது. இதனால் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எம்.அருணா அறிவித்தார்.