தஞ்சாவூர்: ஒருங்கிணைந்த முறையில் நெல் நாற்றங்காலில் பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க பூச்சிகளை கண்காணிப்பது அவசியம் என விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.
நன்கு முற்றிய அந்து பூச்சிகள் தாக்காத முந்தைய பருவத்தில் நோய் தாக்காத விதைகள் விதைப்பதற்கு சிறந்தது. விதைகளை பூசன மருந்துடன் கலந்து விதை நேர்த்தி செய்வது பின்நாளில் நடவு வயலில் காணப்படும் பல்வேறு நோய்களை வராமல் தடுக்க வாய்ப்பாக அமையும். விதை நேர்த்தியை ஈர விதை நேர்த்தி மற்றும் உலர் விதை நேர்த்தி என இரு வகையில் செய்யலாம்.
இதில் ஈர விதை நேர்த்திக்கு 24 லிட்டர் தண்ணீரில் 48 கிராம் கார்பண்டர்சிம் அல்லது ட்ரைசைக்ளோசோல் மருந்தை கலக்க வேண்டும் இதில் ஒரு ஏக்கருக்கு தேவையான 24 கிலோ நெல் விதையை 24 மணி நேரம் ஊற வைத்து பின் நீரை வடித்து முளைகட்டி வழக்கம்போல் விதைக்கலாம். உலர் விதை நேர்த்திக்கு கார்பண்டர்சிம் மருந்தை ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் வீதம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின்பு நீரில் ஊறவைத்து முளைக்கட்டிய பின் விதைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்வதால் நாற்றுக்களை 40 நாள் வரை பாதுகாக்கலாம்.
மண் பரிசோதனைப்படி சரிவிகித ரசாயன உரம் இடுவது அவசியம், இல்லை எனில் சில பூச்சி நோய்களின் பெருக்கம் குறிப்பாக குருத்துப் பூச்சி, புகையான் குலை நோய் இவைகள் அதிகமாகும். சீரிய உர நிர்வாகத்தினால் பூச்சி நோய்களின் பெருக்கத்தை குறைக்க முடியும். பொதுவாக நாற்றங்காலில் டிஏபி உரத்தை இடலாம். ஆனால் யூரியா போடுவதை தவிர்த்தல் நல்லது. நாற்றங்காலுக்கு வயல் மூலம் இல்லாமல் வாய்க்கால் மூலம்தான் நீர் பாய்ச்ச வேண்டும். இதனால் தத்துப்பூச்சிகள், புகையான், குருத்து ஈக்கள் பரவுவது தடுக்கப்படுகிறது. இதற்கு நாற்றங்காலை நன்றாக சமம் செய்வதும், வடிகால் வசதி செய்வதும் அவசியமாகிறது.
நாற்றங்காலில் விதைத்த 15ம் பிஸ்பைரிபேக் சோடியம் (நாசினி கோல்டு) ஒரு ஏக்கருக்கு 80 மி.லி. அளவில் தேவையான 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
நாற்றங்காலில் தோன்றும் முக்கிய நோய்கள்
இலைப்பேன்: நாற்றின் இலைகளில் உள்ள சாறை இலைப்பேன் உறிஞ்சி உண்டு சேதம் ஏற்படுத்துகிறது. தாக்கப்பட்ட இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக மாறி இலையின் நுனிகள் லேசாக கருகி ஓரங்கள் நடுநரம்பை நோக்கி சுருண்டு விடும். இதனால் நாற்றுக்களின் வளர்ச்சி குன்றி வாடி காய்ந்து விடும். நீரில் கையை நனைத்து நாற்றின் தோகையின் மீது தடவி உள்ளங்கையை பார்த்தால் மஞ்சள் மற்றும் பழுப்பு நிற பேன்கள் காணப்படும். 12 கைவீச்சுக்கு 60 பேன்கள் இருந்தால் பொருளாதார சேத நுழைவுநிலையை தாண்டியது என எடுத்துக் கொண்டு மருந்து அடிப்பது அவசியம் ஆகிறது.
ஒரு ஏக்கர் நாற்றங்காலுக்கு பாஸ்போமிடான் 40 சதவீதம் எஸ்எல் 400 மில்லி லிட்டர் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் அல்லது பேட்டரியால் இயங்கும் தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும். நாற்று முழுவதும் நீரில் மூழ்கும்படி ஓரிரு நாட்கள் நீரை நிறுத்தி வடித்தால் நாற்றுகளில் பேன்கள் இல்லாமல் கழுவப்பட்டு விடும்.
பச்சை தத்துப்பூச்சி
பச்சை நிற தாய் பூச்சிகளும், அதன் குஞ்சுகளும் நாற்றில் உள்ள சாறை உறிஞ்சி உண்ணும் இதனால் இலைகள் பழுப்பு நிறமடைந்து காய்ந்துவிடும். பூச்சிகள் தூங்ரோ எனும் நச்சு உயிரி நோயைப் பரப்புகிறது இதனை கட்டுப்படுத்த ஒருமித்த விதைப்பு செய்ய வேண்டும். அறுவடைக்குப்பின் தாள்களை உடனடியாக மடக்கி உழ வேண்டும். நாற்றங்கால் அருகில் மின்விளக்குகள் இருக்கக் கூடாது. நாற்றங்காலில் 25 வலைவீச்சுக்கு 60 பூச்சிகள் இருந்தால் பொருளாதார நுழைவு நிலையை தாண்டியதாக எடுத்துக்கொண்டு பயிர் பாதுகாப்பு மருந்துகளை தெளிக்க வேண்டும்.
இதை கட்டுப்படுத்த ஏக்களுக்கு பாஸ்;போமிடா 40 எஸ்எல் 400 மிலி, புரபனோபாஸ் 50 எஸ்எல் 400 மிலி, கார்போசல்பான் 25 சிஎல் 400 மிலி, தயோ மெத்தாக்ஸிம் 25 டபிள்யூ ஜி 40 கிராம், டிரை அசோபாஸ் 40 இ.சி. 500 மிலி, இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்எல் 50 மிலி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.
படைப்புழு: இப்புழு கோடை மழைக்கு பின் தோன்றும். படை, படையாக திரண்டு நாற்றங்காலை அழித்துவிடும். சேதம் இரவில் அதிகமாக இருக்கும். நாறங்கால் ஆடு, மாடுகள் மேய்ந்தது போல் இருக்கும்.
இதை கட்டுப்படுத்த 20 சென்ட் நாற்றங்காலுக்கு கார்போபியூரான் 3 சதவீதம் சிஜி குருணையை 3.5 கிலோ வீதம் போட்டு 2.5 சென்டிமீட்டர் வரை நீரை நிறுத்த வேண்டும்.
நோய்கள்: குலை நோய், செம்புள்ளி நோய் பாதிப்பு நாற்றங்காலில் தோன்றும். ஆனால் கண்டுபிடிக்க இயலாது. நடவு வயலுக்கு பரவி விடும். எனவே நாற்றங்காலில் நோய்களை கட்டுப்படுத்துவது அவசியம் மற்றும் எளிது. இதனை கட்டுப்படுத்த யூரியாவை பிரித்து இடுமாறு நடவு வயலுக்கு சிறப்பானதாகும். நாற்றங்காலில் நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 200 கிராம் கார்பண்டசிம் 50 சதவீதம் டபிள்யூபி அல்லது ட்ரை சைக்ளோசோல் 75 சதவீதம் டபிள்யூ பி 200 கிராம் அல்லது மெட்டாமினோ ஸ்ரோபின் 20 சதவீதம் ஈசி 200 மில்லி அல்லது அஸாக்சிஸ்ரோபின் 25 சதவீதம் எஸ்.சி 200 மில்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.