புதுச்சேரியில், அரசு வழங்கும் இலவச அரிசி திட்டம் மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் செயல்படுத்தப்பட வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உப்பளத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் முக்கிய தீர்மானங்களில், புதுச்சேரியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தல், கொசு ஒழிப்பு நடவடிக்கைகள், மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அரசின் நிலைப்பாடு, மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
அதிமுக நிர்வாகிகள், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்த இலவச அரிசி திட்டம் சில தொகுதிகளில் மட்டுமே வழங்கப்பட்டு, மற்ற பகுதிகளுக்குத் தாமதமாகியிருப்பதை கண்டித்தனர். அரசு இந்த திட்டத்தை அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும், ரேஷன் கடைகளின் செயல்பாடு தொடர்பாகவும், அரசு திட்டங்கள் பாகுபாடின்றி அனைத்து மக்களுக்கும் சேர வேண்டும் என்பதையும் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.