சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநராக எஸ்.கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் க.அறிவொளி இன்று (ஜூன் 30) பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார். 1994-ம் ஆண்டு மாவட்டக் கல்வி அலுவலராகப் பணியைத் தொடங்கிய இவர், பொது நூலகத் துறை இணை இயக்குநர், இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
நூலகத் துறை இயக்குநராகப் பணியாற்றிய காலத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகக் கட்டுமானப் பணிகளுக்குப் பெரிதும் பங்காற்றினார். 2023-ம் ஆண்டு, பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவொளி, ஓராண்டு பணிக்கு பின், இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.
கல்வித்துறையில் சுமார் 30 ஆண்டுகள் பணியாற்றிய அறிவொளி, துறை சார்ந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் புதிய இயக்குநராக கண்ணப்பன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்:-
தொடக்கக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் பள்ளிக் கல்வி இயக்குநராகவும், தேர்வுத் துறை இயக்குநர் எஸ்.சேதுராம வர்மா தொடக்கக் கல்வி இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல், எஸ்சிஇஆர்டி இயக்குநராக உள்ள என்.லதா, தேர்வுத் துறை இயக்குநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய பொறுப்பை ஏற்கும் கண்ணப்பன், ஏற்கனவே பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த உயர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.