காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால் மற்றும் தமிழக பகுதி சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
இந்நிலையில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது இலங்கை காரைநகர் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களை சிறைபிடித்துள்ளனர். தொடர்ந்து சிறைபிடித்த 12 மீனவர்களையும் காங்கேசன் துறைமுகத்துக்கு இலங்கை கடற்படையினர் அழைத்துச் சென்றனர்.
மேலும் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் சிறைபிடித்தனர். இதனிடையே கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்டுத் தருமாறு மத்திய மாநில அரசுக்கு மீனவப் பெண்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.