வேலூர்: தவெக தலைவர் விஜய் எங்களுக்கு போட்டியா? நாங்கள் உழைப்போம், ஜெயிப்போம் என்று திமுக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காததை கண்டித்து இன்று தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நடிகர் விஜய் தி.மு.க.வுக்கும் அவரது கட்சிக்கும் தான் போட்டி என கூறியிருக்கிறார். யார், யாருக்கு போட்டி என்பது குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் உழைப்போம், ஜெயிப்போம். யார் யாரோடு சேர்கிறார்கள் என்ற கவலை இல்லை.
எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தாலும் சரி யார் யாரை சந்தித்தாலும் அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. காட்பாடி ரெயில்வே மேம்பாலப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.