ஜெருசலேம்: டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃப்ளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட காக்பிட் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் யார் இருந்தாலும் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இந்த விமானத்தில் இந்திய தலைமை விமானி ஸ்மித் மச்சர் மீது ஓமன் நாட்டைச் சேர்ந்த துணை விமானி தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விமானம் திடீரென உயரத்தை இழந்த நிலையில், காயமடைந்த தலைமை விமானி மற்றும் விமானத்தில் இருந்தவர்கள் இணைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

9/11 தாக்குதலுடன் ஒப்பிட்ட நெதன்யாகு
இந்த சம்பவம் மிகப்பெரிய பேரழிவாக மாறுவதை இந்திய விமானி ஸ்மித் மச்சரும், விமானத்தில் இருந்தவர்களும் தடுத்ததாக நெதன்யாகு கூறியுள்ளார். அவர் வெளியிட்ட கருத்துகளில், சம்பவத்தை 9/11 தாக்குதலுடன் ஒப்பிட்டு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தாக்குதலுக்கு பின்னால் வேறு நபர்கள் அல்லது அமைப்புகள் இருந்தனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளின் விசாரணைக்கு இஸ்ரேல் ஒத்துழைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றச்சாட்டுகளின் முழு பின்னணி விசாரணை முடிவடைந்த பின்னரே தெளிவாகும்.
