ஏடன்: ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.
ஹவுதி படைகள் ஏடன் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதாக ஏமன் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓடுதளத்திற்கு அருகே ஏவுகணை ஒன்று விழுந்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கெய்ரோவில் இருந்து ஏடனுக்கு வந்த விமானம் தரையிறங்காமல் ஜெட்டாவுக்கு திருப்பி விடப்பட்டது.
செங்கடலுக்கும் அரேபிய கடலுக்கும் இடையிலான முக்கிய கடல்வழிப் பாதையான பாப் அல்-மந்தப் நீரிணை அருகே மோதல் தீவிரமடைந்திருப்பது சர்வதேச வர்த்தகத்துக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
போர் காரணமாக ஏற்கனவே 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த மோதல் நீடித்தால் எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்தில் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
