இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மேலும் இரண்டு குழந்தைகளுக்கு போலியோ பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டு மட்டும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
அவர்களில் பலுசிஸ்தானில் இருந்து 20 பேர், சிந்துவில் இருந்து 12 பேர், கைபர் பக்துன்க்வாவில் இருந்து 5 பேர் மற்றும் பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத்தில் இருந்து தலா ஒருவர். குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது மதத்திற்கு எதிரானது என பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறுகின்றன.
இதன் காரணமாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் மீது அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
இதில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். பாகிஸ்தான் போலியோ திட்டத்தின் கீழ் ஐந்து வயதுக்குட்பட்ட 45 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக அக்டோபர் 28 முதல் நாடு தழுவிய புதிய தடுப்பூசி முகாம்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, போலியோ பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டுமே உள்ளது.