சீனா: பிரம்மபுத்திரா நதியில் மிகப்பெரிய அணை கட்டும் கட்டுமான பணியை சீனா தொடங்கியுள்ளது. இந்தப் புதிய அணை திட்டத்தால் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது
திபெத்தில் இந்திய எல்லையான அருணாசல பிரதேசத்துக்கு அருகே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்ட சீனா நீண்ட காலமாகத் திட்டமிட்டு வந்தது. இதற்குக் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையிலும், உலகின் மிகப் பெரிய அணையின் கட்டுமானப் பணிகள் நேற்று தொடங்கியுள்ளன.
தொடக்க விழா நியிங்ஜி நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சீனப் பிரதமர் லி கியாங் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இந்த அணையின் அளவு சீனாவின் மற்ற மூன்று பெரிய பள்ளத்தாக்கு அணைகளை விடவும் பெரியதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.14.46 லட்சம் கோடி மதிப்பிலான இந்த மாபெரும் அணைத் திட்டமானது, ஐந்து அடுக்கு நீர்மின் நிலையங்களுடன் அமையவுள்ளது.இவை ஆண்டுக்கு 30,000 கோடிக்கும் அதிகமான கிலோவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் இந்தப் புதிய அணைத் திட்டத்தால் இந்தியாவிலும் வங்கதேசத்திலும் பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டம் பாதிக்கப்படலாம் என்றும், அவசரகாலங்களில் சீனா அதிக அளவில் நீரை வெளியேற்றினால் வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.