
டெஹ்ரானில் ராணுவ ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடைபெற்றுவரும் போர் மிகவும் தீவிரமடைந்த நிலையில், இருநாடுகளும் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றன.

இஸ்ரேலால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானில் உள்ள அணுசக்தி மற்றும் எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றிய நிலையில், பல்வேறு பகுதிகளில் பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இதுவரை ஈரானில் 80 பேர் உயிரிழந்துள்ளதுடன், இஸ்ரேலிலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவங்கள் மத்திய கிழக்கு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் வேளையில், ஈரானில் உள்ள ராணுவ ஆயுத தொழிற்சாலை அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் வசித்து வருபவர்கள் அப்பகுதியிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும், எச்சரிக்கையை மீறி அங்கு இருப்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித்தொடர்பாளர் அவிச்சே அத்ரே கூறும்போது, ‘‘எல்லா ஈரான் குடிமக்களும் எச்சரிக்கையை பின்பற்ற வேண்டும். தொழிற்சாலை அருகில் இருப்பது மிகுந்த அபாயம். மறு அறிவிப்பு வரும் வரை அங்கு திரும்ப கூடாது,’’ என தெரிவித்துள்ளார். மக்கள் பாதுகாப்புக்காக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.