இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் வர்த்தகம் நிறுத்தப்பட்ட நிலையில் மருந்து பற்றாக்குறை அபாயத்தில் பாகிஸ்தான் சிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது. பாகிஸ்தான் தனது மருந்து மூலப்பொருட்களில் 30 முதல் 40 சதவீதம் வரை இந்தியாவை நம்பியுள்ளது. தற்போது இந்தியாவுடன் வர்த்தகத்தை நிறுத்தியதால் மருந்து பற்றாக்குறையில் சிக்கும் அபாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.
இதையடுத்து மருந்து விநியோகத்தைப் பாதுகாக்க பாகிஸ்தான் ‘அவசர’ நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் அவசரகால தயார்நிலை நடவடிக்கைகளை பாகிஸ்தான் சுகாதார அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் கூறும்போது, எங்கள் மருந்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை நாங்கள் இப்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.