ஸ்பெயின்: கப்பலில் வந்த 10 டன் கோகோயின் போதைப் பொருளை கடலிலேயே மடக்கி பிடித்துள்ளனர் ஸ்பெயின் புலனாய்வு அமைப்பினர்.
ஸ்பெயின் நாட்டுப் போலீஸார் மற்றும் சர்வதேசப் புலனாய்வு அமைப்புகள் இணைந்து நடத்திய ‘ஒயிட் டைடு’ என்ற அதிரடி வேட்டையில், அட்லாண்டிக் கடலில் உள்ள கேனரி தீவுகளுக்கு அருகே சுமார் 10 டன் கோகோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 4 ஆயிரத்து 500 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.
இது ஸ்பெயின் நாட்டின் வரலாற்றிலேயே கடல் பகுதியில் பிடிபட்ட மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் சம்பவமாக கருதப்படுகிறது. பிரேசிலில் இருந்து ஐரோப்பாவை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பலில், உப்பு மூட்டைகளுக்கு அடியில் இந்த போதைப்பொருள் பொதிகள் மிகவும் ரகசியமாகப் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த ஆபரேஷனை ஸ்பெயின் காவல்துறை, அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, பிரிட்டனின் தேசிய குற்றவியல் முகமை, பிரேசில், பிரான்ஸ், போர்ச்சுகல் நாட்டு அதிகாரிகள் வெற்றிகரமாக நடத்தினர்.