லண்டன்: “வளமான தமிழகமாக நமது மாநிலம் வளர்ந்து வருகிறது. மற்ற மாநிலங்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு முன்னேறி உள்ளோம். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் லண்டனில் நடைபெற்ற விழாவில் உரையாற்றினார்.

முதல்வர் ஸ்டாலின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற விழாவில் ஈ.வெ.ரா.வின் உருவப்படத்தை திறந்து வைத்தார். “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நூற்றாண்டுகளாக அறிவு மையமாக இருந்து, உலகின் சிறந்த சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது. அந்த அரங்கில் பேசுவது பெருமை” என்றார்.
தன்னை “முதல்வராகவும், திமுக இயக்கத்தின் தலைவராகவும் மட்டுமல்லாமல், ஈ.வெ.ராவின் பேரனாகவும்” பெருமிதத்துடன் கருதுவதாக ஸ்டாலின் வலியுறுத்தினார். “சுயமரியாதை இயக்கத்தின் வாரிசாக, ஈ.வெ.ரா.வின் படத்தை இங்கு திறந்து வைப்பது என் வாழ்நாள் சாதனை” என்றும் கூறினார்.
“கல்வி, பொருளாதாரம், தொழில், வாழ்க்கைத் தரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழகம் முன்னேறி வருகிறது. பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. உலக நாடுகள் வியக்கும் அளவுக்கு தமிழகத்தின் வளர்ச்சி பயணம் தொடர்கிறது. இது திராவிட இயக்கத்தின் வெற்றி” என்று அவர் உரையாற்றினார்.