ஆப்கானிஸ்தான்: தடை நீக்கத்தால் மீண்டும் இயக்கம் …தடை நீக்கப்படுவதினால் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெண்களுக்கான வானொலி நிலையம் மீண்டும் இயக்கப்படவுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் நாளின் போது ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் மட்டும் இயக்கும் வகையிலான வானொலி நிலையம் ஒன்று ‘ரேடியோ பேகம்’ எனும் பெயரில் துவக்கப்பட்டது. அந்த வானொலியில் ஒலிப்பரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆப்கானின் பெண்களினால் உருவாக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தது.
இந்த வானொலியின் துணை நிறுவனமான ‘பேகம் டிவி’ எனும் தொலைக்காட்சி பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆப்கானினுள் இயங்கி, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான ஆப்கானின் கல்வி பாடத்திட்டை நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பி வந்தது.
இந்த வானொலி நிலையம் நிறுவப்பட்ட 5 மாதங்களில் அந்நாட்டில் தலிபான்கள் ஆட்சியமைத்தனர். அவர்களது ஆட்சியின் கீழ் 6 ஆம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தடை விதிக்கப்பட்டது.
மேலும், வெளிநாட்டு தொலைக்காட்சி சேனலுக்கு அங்கீகரிக்கப்படாத உள்ளடக்கத்தை (கண்டண்டுகளை) வழங்கியதாகவும், அதன் உரிமத்தை முறையற்று பயன்படுத்தியதாகவும் கூறி தலிபான் அரசு அந்த வானொலி நிறுவனத்தின் செயல்பாடுகளை நிறுத்தி தடை விதித்தது.
இந்நிலையில், நேற்று (பிப்.22) இரவு தலிபான் அரசின் செய்தி மற்றும் கலாச்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’ரேடியோ பேகம்’ வானொலி மீண்டும் இயக்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து அவர்கள் கேட்டுகொண்டதினால், அதன் மீதான தடை விலக்கப்பட்டு இயக்கப்பட அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்லாமிய ஆப்கானிஸ்தான் அமீரகத்தின் ஊடகத்துறை கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றுவதாகவும், எதிர்காலத்தில் எந்தவொரு விதிமீறல்களிலும் ஈடுபட மாட்டோம் என அந்நிறுவனம் உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.