வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜோ பைடன் வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தலையொட்டி லாஸ் வேகாஸில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து மருத்துவர்கள் அவருக்கு கொரோனா தொற்றினை உறுதி செய்தனர்.
இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரின் ஜேன் பியரே கூறியதாவது, ‛ அதிபர் பைடன் கொரோனா தடுப்பூசி ஏற்கனவே செலுத்தியுள்ளார். தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்டு டெலாவேரில் தனிமையாக தங்கியிருப்பார். அங்கிருந்த படி அலுவலக பணியினை மேற்கொள்வார்’ இவ்வாறு தெரிவித்தார்.
பைடனின் பிரத்யேக மருத்துவர் தெரிவித்ததாவது, ‘ அதிபர் பைடனுக்கு லேசான அறிகுறிகள் தான் உள்ளன. இவர் ‛பாக்ஸ்லோவிட்’ கொரோனா தடுப்பூசியை ஏற்கனவே போட்டுக் கொண்டதால் இவருக்கு கொரோனா பாதிப்பால் பிரச்னை வர வாய்ப்பில்லை. காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறு இது வரை அதிபருக்கு இல்லை.’ இவ்வாறு மருத்துவர் தெரிவித்தார்
இந்நிலையில் லாஸ் வேகாஸ் விமானநிலையம் வந்தடைந்த ஜோ பைடன் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.