மியாமி: தலையில் இரத்தம் வழிந்த நிலையில் விமானத்தில் இருந்து இறங்க மறுப்பு தெரிவித்த பயணி கைது செய்யப்பட்டார்.
மியாமி சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியது. 27 வயதான ஹெர்னான்டஸ் கார்னியர் தலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு விமானத்தில் ஏறினார்.
திடீரென அவரது தலையில் இருந்து இரத்தம் வழிய ஆரம்பித்ததால், விமான பணியாளர்கள் கார்னியரை விமானத்தில் இருந்து வெளியேற வலியுறுத்தினர். எனினும், அவர் விமானத்தை விட்டு வெளியேற மறுத்துள்ளார்.
நீண்ட நேரம் அறிவுறுத்திய பிறகும் விமானத்தில் இருந்து கார்னியர் வெளியேற மறுத்ததால், பணியாளர்கள் காவல் துறை உதவியை நாடினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கார்னியரை விமானத்தில் வைத்து கைது செய்து வெளியே அழைத்து சென்றனர். இவருடன் பயணிக்க இருந்த பிலான்கா லயோலாவும் விமானத்தில் இருந்து கைது செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்த சம்பவம் காரணமாக குறிப்பிட்ட விமானம் அன்றிரவு புறப்படாமல் அதிகாலையில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தில் விமான அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்து, ரகளையில் ஈடுபட்ட கார்னியர் மற்றும் லயோலா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னதாக தலையில் இருந்து இரத்தம் வழிந்ததால், கார்னியருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.