சென்னை: வலுவான எலும்புகள் மற்றும் பற்களுக்கு கால்சியம் அவசியம். கால்சியம் நிறைந்த உணவுகளை உண்பதால் பல நோய்களில் இருந்து காத்துக்கொள்ளலாம்.
உடலில் உள்ள எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்துவதற்கு மட்டுமல்ல, நரம்பு மண்டலம், இதயம் மற்றும் செரிமான அமைப்புகளின் சீரான செயல்பாட்டிற்கும் கால்சியம் அவசியம்.
பால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் நிறைந்துள்ளது. 250 மில்லி பாலில் 300 மில்லிகிராம் கால்சியம் உள்ளது. ஒரு கப் பாதாமில் 300 மி.கி கால்சியம் உள்ளது. பாதாமை ஊறவைத்து அல்லது நேரடியாக உண்ணலாம்.
தயிர் 350 மில்லிகிராம் கால்சியத்தை வழங்குகிறது. நறுக்கிய பழங்கள் மற்றும் கொட்டைகளுடன் தயிர் கலந்து சாப்பிடவும்.
எள்ளில் கால்சியம் அதிகம் உள்ளது. எள்ளை சாலட் போன்றவற்றில் பயன்படுத்தலாம். எள் உருண்டைகள் உடலுக்கு பலம் தரும். ஒரு கப் கொண்டைக்கடலை 420 மில்லிகிராம் கால்சியத்தை வழங்குகிறது. சுண்டலை பச்சையாகவோ அல்லது குழம்புடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
100 கிராம் பாரம்பரிய சிறுதானிய உணவான கேழ்வரகில் 345 மி.கி கால்சியம் கிடைக்கிறது. வாரத்திற்கு நான்கு முறை கேழ்வரகு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.