சென்னை: உடற்பயிற்சிக்கு முன்பு ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.
உடற்பயிற்சியும் சமச்சீர் உணவும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியமானவை. பலர், நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்துவிட்டு மாலையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) செல்கின்றனர்.
இன்னும் சிலருக்கு காலையில் உடற்பயிற்சி செய்வது வசதியாக உள்ளது. எப்படியாயினும் கடுமையான பயிற்சிக்கு உடலை உட்படுத்தும் முன்னர் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்துவது முக்கியம். உடற்பயிற்சி செய்வதற்கு ஆற்றல் அவசியம். ஆகவே, நன்கு சக்தியளிக்கக்கூடிய உணவு பொருள்களை சாப்பிட வேண்டும். எவற்றை சாப்பிட வேண்டும் என்று சரியாக தேர்ந்தெடுப்பதே முக்கியம்.
காலை வேளையில் உடற்பயிற்சி செய்வோர் சாப்பிடக்கூடிய சில உணவு பொருள்கள்:
ஓட்ஸ் கஞ்சி: காலையில் ஒரு கோப்பை ஓட்ஸ் கஞ்சி குடிப்பது நல்ல ஆரோக்கியத்தை அளிக்கும். ஓட்ஸ், அதிக நார்ச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் அடங்கியது. ஆகவே, அதிக ஆற்றலை உடலுக்கு அளிக்கும். ஓட்ஸ் கஞ்சியுடன் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் விருப்பத்திற்கிணங்க முந்திரி, வாதுமை போன்றவற்றை சாப்பிடலாம்.
பெர்ரி வகை பழங்கள் அல்லது யோகர்ட் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். அவற்றை சேர்க்கும்போது சாப்பிட சுவையாக இருக்கும்.
பழங்கள்: காலையில் உடற்பயிற்சிக் கூடத்திற்கு (ஜிம்) செல்லும் முன்னர், பழங்கள் சாப்பிடுவது விரும்பத்தக்கது. இரும்பு, மெக்னீசியம் உள்ளிட்ட பல சத்துகள் பழங்களில் அடங்கியுள்ளன. பழங்களுடன் சுவையாக எதையாவது சாப்பிட விரும்பினால் வாழைப்பழம் மற்றும் பால் சேர்த்து ஸ்மூத்தி தயாரித்து அருந்தலாம்.
கிரீக் யோகர்ட்: பிரோபியோடிக்ஸ் என்னும் நன்மை தரும் நுண்ணுயிரிகள், புரோட்டீன் என்னும் புரதம் மற்றும் கால்சியம் ஆகியவை அடங்கியிருப்பதால் உடற்பயிற்சிக்கு முன்பதாக எடுத்துக்கொள்ளக்கூடிய உணவு பொருள் கிரீக் யோகர்ட் ஆகும்.
பான்கேக்: உடற்பயிற்சி செய்வதற்கு முன்பு சாப்பிடக்கூடியது புரத பான்கேக்குகள் ஆகும். இவை செரிப்பதற்கு சற்று கடினமானவை என்பதால் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதற்கு அதிக நேரத்திற்கு முன்பதாக புரோட்டீன் பான்கேக்கை சாப்பிட வேண்டும்.